பின் நவீனத்துவ மாமா


மாமா என்று அன்போடு அழைக்கப்படும் "கணேஷன் மாமா" எங்கள் ஊரின் புதிர், படிப்பாளிஆனந்த விகடன் படித்தாலே அறிவாளி என்று ஒத்துக்கொள்ளப்பட்ட ஊரில் புதிய பெயர்களையும் நூல்களையும் அறிமுகம் செய்து வைத்தவர். விட்டேற்றி. எதைப் பற்றியும் எவனைப் பற்றியும் கவலையில்லாதவர், தற்பொழுது ஏதோ பின் நவீனத்துவமாம் அதைப் பற்றியே பிதற்றிக் கொண்டிருக்கிறார். அதன் பொருள் கட்டுடைத்தலாம், முன்னொரு காலத்தில் கல் உடைத்தவர் ஆதலால் கட்டுடைத்தல் அவருக்கு சற்று எளிது என்பது என் பின் நவீனத்துவச் சிந்தனை.
வெற்றிலையுடன் வாழ்ந்து வந்தவர் சரக்கிற்கு மாறியதும் நவீனத்துவத்தின் நீட்சியே, அவரின் சாய்ஸ் ஊருக்கு வெளியே அமைதியாக இயங்கும் டாஸ்மாக், அது டாஸ்மாக் இல்லடா வாழ்க்கையின் வெளிச்சமென்பார், புத்தருக்கு போதி மரம் போல இவருக்கு அரசி ஒயின்ஸ்.
அங்கு அவர் உதிர்க்கும் தத்துவங்கள் உக்கிரமாக போதையின் அளவிற்கேற்ப இருக்கும், புகழாளி சிலுக்கு மரித்த போது பெரும் வேதனைக்கு ஆளான லட்சோப லட்ச பக்தர்களில் அவருமொருவர், லௌகீக வாழ்விலிருந்து விடுபடப் போவதாக அன்றே பறைசாற்றினார். அதுவும் பின் நவீனத்துவத்தின் ஒரு எச்சம் என்று சைடில்  துப்பிக் கொண்டே சொன்னது சரியாகத்தான் இருக்கு என்று புரிந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவரிடமிருந்த இன்னொரு முக்கியக் கொள்கை அவர் பேசுவார் நாம் கேட்டுக் கொள்ளவேண்டும், அதற்கு விவாதம் என்று பெயரிட்டு  அழைக்கலானார் மாமா.
1980 வாக்கிலயே கோடம்பாக்கம் சென்று புரட்சிகரமான கதையை பதினாறு வயதினிலே படத் தயாரிப்பாளர் ராஜ்கன்னுவிடம் கூறியவராம் அதுவும் அவரின் இலக்கியத் தகுதிக்கு ஒரு மகுடம், கதை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை, வேறொருவனுடன் கல்யாணமான தனது முன்னாள் காதலிக்காக உருகும் ஹீரோ.

ஹீரோவிற்காக காதலியின் கணவனை லாரியில் இடித்துக் கொன்று திரைக்கதை இயம்பினார். கொஞ்சம் கமர்சியலாக்க ஒரே ஒரு முறை மட்டும் தவறு செய்ய ஹீரோயினைத் தூண்டினார் பின்னனியில் இளையராஜாவைப் பாட வைத்தார், எல்லாம் .கே ஆனால் படத்தின் தலைப்பு அவரின் கோடம்பாக்கம் கனவுகளுக்கு கேட்டைப் போட்டு மூடியது, "ஒரு தீப்பெட்டி காலிப் பெட்டியாகிறது" என்பது படத் தலைப்பு.
பொள்ளாச்சியிலிருந்து பெரும் கனவுகளுடன் வந்திருந்த ராஜ்கன்னுவிற்கு காலிப்பெட்டியான தீப்பெட்டி தன் பணப் பெட்டியைக் குறிப்பாலுணர்த்தியிருக்கலாம், தன் பெட்டியை இறுகப் பிடித்துக் கொண்டே தம்பி போய் நல்ல கதை கொண்டு வா என்று சொல்லி விட்டாராம், இவ்வாறாக கோடம்பாக்கம் ஒரு இரண்டாம் பாரதிராசாவை இழந்தது,

இன்று. நனவுலகில் மாமா. இன்று சற்று போதை அதிகம்தான், லௌகீக வாழ்விலிருந்து விடுபட்ட படியால் பின் வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது தண்ணீர் ஊற்றி அணைக்காமல், அதற்கு உதவாமல் நெருப்பின் நன்மை தீமை பற்றியும் வாழ்வின் அபத்த கணங்கள் குறித்தும் வெற்றிலையைப் போட்டு மென்று கொண்டே சிந்தித்துக் கொண்டிருந்தாராம், அத்தோட விட்டிருந்தால் வசவுகளோடு போயிருக்கும், ,

"வெந்து தணிந்தது வீடு
உயிரோடிருந்தா எந்திரிச்சு ஓடு"

என்று கவிதை வேறு இயற்றியிருக்கிறார். குறுக்கில் மிதித்தது சரிதான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன், இப்போ பாரதி இருந்தா என்ன பண்ணிருப்பான் தெரியுமா என்றார்? செருப்பால அடிச்சிருப்பார் என்று எண்ணிக் கொண்டே,


 நீங்களே சொல்லுங்க மாமா என்றேன்.
Newest
Previous
Next Post »