தூர்தர்சன்ல ரெண்டு நிகழ்ச்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும், முன்னோட்டம், அப்புறம் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு. ஊர்ல காணாமப் போறவங்கெல்லாம் சென்னை எழும்பூர் எட்டுல தான் தங்கியிருப்பாங்கன்னு முழுசா நான் நம்புனேன்.
ஒரு தடவ பறக்கர குருவிய அடிச்சுக் காமிக்கறேன்னு பந்தையம் கட்டி கல்ல விட்டு அடிச்சதுல ஜஸ்ட் மிஸ்ஸுல (ரெக்கைல கல்லு பட்டுச்சுனு இப்பையும் நான் நம்பறேன்) குருவி எஸ் ஆகி கல்லு வாத்தியார் வீட்டு ஓட ஒடச்சிருச்சு. கடுப்பான வாத்தியார் எங்க தாத்தன் கிட்ட புகார் பண்ணப் போறதாச் சொன்னார், இந்த இத்துப் போன டவுன் மாதிரி கிராமத்துலயெல்லாம் பொடுசுக மேல நெனச்ச உடனே கைய நீட்ட முடியாது, தொலச்சுருவாங்க. அதுவும் நான் ஒறம்பரையான் வேற, அதனால வழக்கமா இதுக்கெல்லாம் கொக்கானி காட்டிட்டு ஓடிறுவேன்.
விதிவிலக்கா ஒரே ஒரு சம்பவம்.. எங்கூருக்கு மொத தடவையா ஒரு கழுத வந்துருச்சு, ஆமா எப்படியோ வந்துருச்சு. நாட்டுல என்னென்னமோ விசித்திரமெல்லாம் நடக்குது ஏன் ஒரு கழுத வரக்கூடாதா ஊருக்குள்ள? வந்த கழுத எங்களோட பல இமசைகளைத் தாண்டி ஒரு குட்டிச் செவுத்துப் பக்கம் கர ஒதுங்கி செவனேனு நின்னுக்கிட்டு இருந்துச்சு, ஆர்த்தியோட தங்கச்சி கீர்த்திய அத வாலப் பிடிச்சு இழேன்னு நான் சொல்ல, சின்னப் புள்ள போய் இழுத்துருச்சு, விட்டுச்சு பாருங்க ஒரு ஒத. அதுக்கு மட்டும் நான் பொது மாத்து வாங்குனேன். சரி ஓடு ஒடஞ்ச பிரச்சனைக்கி வருவோம்.
சம்பவத்துக்கு சரியா ஒரு வாரம் முன்னாடி தான் திருடுனதுக்கு எங்க தாத்தா கிட்ட அடி வாங்கியிருந்தேன், சோ பெஸ்ட் ஆப்ஷன் ஓடிப் போயிருவோம், என்ன மன்னிச்சுட்டதா எழும்பூர் எட்டுக்கு எங்கம்மாயி லெட்டர் எழுதற வரைக்கும் அங்கயே சாப்டுட்டு தங்கிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
ஆனா ரெண்டு வாரம் கழிச்சு நடக்கப்போறதா இருந்த பொங்கல் கிரிக்கெட் போட்டில எங்க ஊர் டீமான "வயாக்ரா டேஞ்சரசும்" (டீம் பேர் செலக்சன் நம்ம) கலந்துக்க இருந்ததால அடியே வாங்கிக்கலாம்னு ஓடிப் போகல.அப்பொவே என்ன ஒரு கிரிக்கட் காதல். அந்த மேட்ச்சுல நாங்க வின்னு, அப்போ நான் பண்ண ஒரு ரன் அவுட்டுக்காக ரமேஷ்ங்கற ஒரு பக்கி என் கை மணிக்கட்டுல குனிஞ்சு முத்தம் குடுத்துச்சு, பாட்ஷா படம் தூர்தர்சன்ல பாத்துருப்பான்னு நெனைக்கிறேன். அதான் எனக்கு நினைவு தெரிஞ்சு கெடச்ச முதல் முத்தம்..
தூர்தர்சன்ல எனக்குப் பிடிச்சது (அப்போ) ஜங்கிள் புக், சுஜாதாவின் என் இனிய இயந்திராவும் ஸ்ரீ ரங்கத்து தேவதைகளும். ராவிரா கதைல டெல்லி கணேசும் மோகமுள் படத்துல வருவாரே இப்போ சீரியல்ல எல்லாம் வர்றார் அவரும் நடிச்சிருந்தது ஞாபகம் இருக்கு. அவரு பேர் விக்னேஷோ என்னமோ.
இந்த தூர்தர்ஷன் நாடக அனுபவத்துல ஆறாவது படிக்கும் போது ஸ்கூல் ஆண்டு விழாவுல விக்கிரமாதித்தன் கதைல வர்ற காத்திருடன் அரைத்திருடன் முழுத்திருடன் கதைய நாடகமா நான் இயக்கி அரங்கேற்றம் பண்ணது ஒரு துக்கானுபவம். லீடிங் ரோல் கெடைக்காத கடுப்புல இருந்த நாய்கடி நாகேந்திரன் ஒட்டு மொத்த சீரியஸ் பிளேவையும் காமெடியா மாத்தி உட்டுட்டான், இத தனியா எழுதணும். ஆனா ஒரு விஷயம் இப்போயும் ஆச்சர்யம், ஒரு ஒரு கேரக்டர் அறிமுகத்துக்கு முன்னாடியும் எங்க ஸ்கூல்ல அப்போ டென்த் படிச்சுக்கிட்டு இருந்த துரைராஜ்னு ஒரு ஃபேமஸ் ஆனா அண்ணன பேக்டிராப்ல பேச வெச்சேன், எப்பிடி இந்த ஐடியா எனக்கு அப்போ தோணுச்சுங்கிறது மலப்பா இருக்கு.

ConversionConversion EmoticonEmoticon